பஸ் கட்டண மீளாய்வு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு

பஸ் கட்டண மீளாய்வு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு

பஸ் கட்டண மீளாய்வு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 1:41 pm

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இம்முறை பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத் திருத்தமொன்று தமக்கு தேவை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என மாகாணங்களுக்கு இடையிலான சேவையை மேற்கொள்ளும் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைய ஜூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது

இதன்போது அநேகமான சந்தர்ப்பங்களில் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன் ஒரு சந்தர்ப்பத்தில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இம்முறையும் பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன்  பிரியன்ஜித் கூறியுள்ளார்.

ஜுலை மாதம் முதலாம் திகதி அன்றே கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிடம் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பஸ் உரிமையாளர்களையும் பாதுகாக்கும் வகையில் பஸ் கட்டணத் திருத்தத்திற்கான வலியுறுத்தலை தமது சங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அஞ்ஜன் பிரியஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜுலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றபோதிலும் உடனடியாக கட்டண அதிகரிப்புக்கான வாய்ப்பு இல்லை என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பஸ் கட்டண முரண்பாடுகளை நீக்குவதே பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என மாகாணங்களுக்கு இடையிலான சேவையை மேற்கொள்ளும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டினை காண வேண்டும் என சங்கத்தின் தலைவர் சரத் விஜித்த குமார தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்