தம்மை காப்பாற்றுமாறு கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடலில் தவிக்கும் இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் வேண்டுகோள்

தம்மை காப்பாற்றுமாறு கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடலில் தவிக்கும் இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் வேண்டுகோள்

தம்மை காப்பாற்றுமாறு கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடலில் தவிக்கும் இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 7:22 pm

இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே எண்ணெய் கசிவினால் செயலிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 13 ஆம் திகதி புதுச்சேரியிலிருந்து இந்த படகு   பயணத்தை ஆரம்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதில் 32 பெண்களும், 37 சிறுவர்கள் உட்பட 153 பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் கிறிஸ்மஸ் தீவிலிருந்து சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் நின்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த படகில் இருக்கும் இலங்கை தமிழ் அகதி ஒருவர் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

தமிழ் மகன் தெரிவித்த கருத்து:-

“படகில் 32 பெண்களும், 37 சிறுவர்களும் உள்ளனர். கிறிஸ்மஸ் தீவிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் படகு நின்றுள்ளத. படகில் உள்ள அனைவருமே இலங்கை தமிழ் அகதிகளாவர், எமக்கு உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. கடலில் பலத்த காற்று வீசுவதுடன் மழை பெய்து வருகின்றன. பெரும் அலைகள் படகை தாக்குகின்றன. இங்கு சில படகுகளின் விளக்கு ஒளிகள் தெரிகின்றன, ஆனால் எமக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்களை காப்பாற்ற யாரேனும் உதவ வேண்டும்.’

இதேவேளை, கடல் எல்லைப் பகுதியில் சிக்கும் படகுகளை மீட்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை   மேற்கொள்ளப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எபர்ட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கொள்கையினை அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர் விசா இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் சென்ற எவருக்கும் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுரு அல்லது பப்புவா நியூ கினியாவின் மனூஸ் தீவுகளின் உள்ள முகாம்களிலேயே தங்க வைக்கப்படுகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாக அவுஸ்திரேலியா கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற பல படகுகள் இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.

எனினும் தற்போது கடலில் நிர்க்கதியாகியுள்ள படகு இந்தோனேஷியாவில் இருந்து வராததால் அந்தப் படகு எங்கு கொண்டு செல்லப்படும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அண்மைக்காலமாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாநோக்கி படகில் சென்ற நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்