இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களை இலங்கை முழுமையாக நிராகரிக்கின்றது – மனிஷா குணசேகர

இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களை இலங்கை முழுமையாக நிராகரிக்கின்றது – மனிஷா குணசேகர

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 9:22 pm

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு, பாதுகாப்பு பிரிவினரினால் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி மனிஷா குணசேகர தெரிவிக்கின்றார்.

இலங்கையின் பாதுகாப்பு பிரிவினர், அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினரை துஷ்பிரயோகத்திற்கும், வல்லுறவிற்கும் உட்படுத்தியதாக கனடா எழுப்பிய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 26ஆவது அமர்வு இன்று நடைபெற்றபோதே, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி இதனைக் கூறினார்.

[quote]விரிவான தரவுகள் மற்றும் சாட்சியங்கள் இல்லாது, இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமையை இலங்கை முழுமையாக நிராகரிக்கின்றது. இலங்கை துன்புறுத்தல்களுக்கு எதிரான வலுவான கொள்கைகளை கொண்டுள்ளது. பாலியல் ரீதியாகவும், பாலினம் தொடர்பாகவும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக சிறந்த கொள்கைகள் காணப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பதிவாகும் வழக்குகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகின்றோம். பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடையவர்கள் யுத்த காலப் பகுதியில் 5.6 வீதமான குற்றச் செயல்களுடன் தொடர்புப்பட்டனர். யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் அந்த எண்ணிக்கை 3.3 வீதமாக காணப்பட்டது. துல்லியமான சாட்சியங்களுடன் முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு இன்மை தொடர்பில் இராணுவத்தினர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை முழுமையாக நிராகரிக்கின்றது.. இந்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்பூர்வமான சாட்சியங்கள் அற்றவை. எனவே  பொருப்பற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும், டயஸ் போராக்களின் தூண்டுதலுக்கு அமைய செயற்படுவதையும் தடுக்க வேண்டும் என இலங்கை கனடாவை கேட்டுக்கொள்கின்றது. நீண்ட கால யுத்தத்தின் பின்னர் சமூகங்களுக்கு இடையில் சிறந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த செயற்பாடு எந்த வகையிலும் ஒத்துழைப்பு அளிக்காது.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்