இனப்பிரச்சினை தீர்விற்கு மூன்றாம் தரப்பு அனுசரணை அவசியம்; ஐ.நா உதவிச் செயலாளரிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்

இனப்பிரச்சினை தீர்விற்கு மூன்றாம் தரப்பு அனுசரணை அவசியம்; ஐ.நா உதவிச் செயலாளரிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 7:42 pm

வடக்கில் முதலமைச்சர் தலைமையில் ஒரு நிர்வாகமும், ஆளுநர் தலைமையில் மற்றுமொரு நிர்வாகமும் காணப்படுவதனால் மக்களுக்கு சேவையாற்றுவதில் அதிகாரப் பிரச்சினை காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் எடுத்துக் கூறியுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின்  அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஒஸ்கார் பெர்ணான்டஸ் தரன்கோ உள்ளிட்ட குழுவினருடன் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

[quote]தொடர்ச்சியாக இன்றும் ஐ.நா அதிகாரியையும் அவரது குழுவினரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சந்தித்து பேசியது. அதில் திரு.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் மற்றும் நானும் அதில் கலந்து கொண்டிருந்தேன். முக்கியமாக இங்கு மூன்று விஷயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். யுத்திற்கு பிற்பாடு மக்கள் முழுமையாக மீளக்குடியேற முடியாத நிலமைகள், அது வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் சம்பூரிலும் காணப்படும் நிலமை பற்றி பேசப்பட்டது. இரண்டாவதாக அவர்களது வாழ்வாதாரம் பற்றி பேசப்பட்டது. வடக்கு மாகாணத்தில் பிரத்தியேகமாக யுத்தத்திற்கு பிற்பாடு உள்ள பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது. வடக்கு மாகாணத்தை பொருத்தமட்டில் பிரத்தியேகமாக திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்த வேண்டும். ஆனால்  அதற்கான அதிகாரங்கள் இல்லாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. அங்குவொரு சமாந்திரமான ஒரு நிர்வாகம் காணப்படுகிறது. முதலமைச்சர் தலைமையிலான ஒரு நிர்வாகமும், ஆளுனர் மற்றும் பிரதம செயலாளர் தலைமையில் மற்றுமொரு நிர்வாகமும் இடம்பெறும் ஒரு சூழ் நிலையில் எதனையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டது.  அதேபோன்று அரசியல் தீர்வுத் திட்டங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது. அதற்காக இதுவரை காலமும் நாம் எந்தெந்த முயற்சிகளை மேற்கொண்டோம், அந்த முயற்சிகளுக்கு என்ன குந்தகங்கள் ஏற்பட்டன. அரசாங்கம் எப்படி நடந்து கொண்டது போன்ற வியடங்களும் தெளிவுபடுத்தப்பட்டது. இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வு முக்கியம் என்று சொன்றால் நிச்சியமாக ஒரு மூன்றாம் தரப்பு அனுசரணை ஒன்று தேவை என்பதனை நேற்று வலியுத்தியிருந்தோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்