சுகாதார வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

சுகாதார வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

சுகாதார வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 1:52 pm

நுவரெலியா மாவட்டதில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் கொட்டகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தொடர்ந்தும் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் சிதத் விஜேயசேகர தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுடன் இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து,  பணிபகிஷ்கரிப்பை நிறைவு செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார வைத்திய அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கையை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்,சுகாதார அமைச்சிடம் முன்வைத்திருந்தது.

வைத்திய அதிகாரிகளின் கோரிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும், கொட்டகல தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணிமனையின் வைத்திய அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டதாகவும்  சிதத் விஜேயசேகர குறிப்பிட்டார்.

மேலும் , கொட்டகல சுகாதார  வைத்திய அதிகாரி பணிமனைக்கு எவ்வித அரசியல் அச்சுறுத்தலும் எதிர்காலத்தில் விடுக்கப்படக்கூடாது என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால்  உறுதியளிக்கப்படும் வரை , கொட்டகல பணிமனைக்கு வைத்திய அதிகாரிகள் சமூகமளிக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

எனினும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கொட்டகல சுகாதார பணிமனையில் ஸ்தம்பிதமடைந்துள்ள சேவையால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் தொடர்பில்  அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொட்டகல சுகாதார வைத்திய அதிகாரி  பணிமனைக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுதறுத்தலை அடுத்து,  நுவரெலியா மாவட்டதின் 13 சுகாதார வைத்திய அதிகாரி  பணிமனைகளை சேர்ந்த சுமார் 25 சுகாதார வைத்திய அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்