யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணை முன்னெடுக்கப்படும் – ருபேட் கொல்வில்

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணை முன்னெடுக்கப்படும் – ருபேட் கொல்வில்

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணை முன்னெடுக்கப்படும் – ருபேட் கொல்வில்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 9:00 pm

இலங்கைக்கு வருகைதருவதற்கு அனுமதியளிக்கப்படாத போதிலும், நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

நியூஸ்பெஸ்ட் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதிலளிக்கும் வகையில், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் ருபேட் கொல்வில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகை தருவதற்கான அனுமதியளிக்கப்படுவது சிறந்தது எனவும், அனுமதி கிடைக்காத பட்சத்திலும் முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கான சாத்தியம் தொடர்ந்தும் தென்படுவதாக கொல்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு அமைய, இலங்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச விசாரணைக் குழு நாட்டிற்கு  வருகைதருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை தீர்மானமொன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்படாத போதிலும், சிரியா மற்றும் வட கொரியா தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்த அனுபவங்களை உதாரணமாக சுட்டிக்காட்டிய கொல்வில், இலங்கை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

குறித்த நாடுகளுக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியளிக்கப்படாத பட்சத்திலும், மிகவும் விரிவான தகவல்களை பெற்றுக்கொண்டதாகவும், முக்கியமான பல சாட்சியங்கள் தமக்கு கிடைத்ததாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில், விசாரணைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே வடிவமைத்துள்ளதாகவும் ருபேட் கொல்வில் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்