சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 9:16 pm

சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் பங்கேற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் பகுதிகளில் நடத்தப்பட்ட படுகொலைகளை, அழிப்புகளை, பொருளாதாரத் தாக்குதல்களை கண்டிப்பதாக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முஸ்லிம்களுடைய பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வட மாகாண சபையின் உறுப்பினர் அஸ்மின் அயூப் கூறியுள்ளார்.

பொறுமை என்ற ஆயுதத்துடன், அகிம்சை வழியிலும், அமைதிப் பேரணிகள் மூலமாக பேராட்டத்தை மேற்கொள்வதாக வட மாகாண சபையின் உறுப்பினர் மொஹமட் நிபாஹீர் கூறினார்.

தமக்கு நடந்த அநியாயங்களை சர்வதேசத்திடம் சொல்வதற்கு, முஸ்லிம் சகோதரர்களும் முன்வர வேண்டுமென வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிங்கம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தீர்வையும், தமிழ் – முஸ்லிம்கள் இணைந்த ஒரு சுயாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் பட்சத்தில் தமது பிரச்சினைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல முடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

முஸ்லிம் அரசியல் தலமைத்துவம், அதன் சந்தர்ப்பவாத செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அப்பாவி முஸ்லிம் சகோதரர்கள் பாதிக்கப்படுகின்றமையை வன்மையாகக் கண்டிப்பதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முஸ்லிம் மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கு முஸ்லிம் தலைவர்கள் செயற்படுவார்களா? என்பதை வருங்காலம் தீர்மானிக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

இதேவேளை, வவுனியாவில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றுக்கு பொலிஸாரினால் இடையூறு விளைவிக்கப்பட்டது.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்பாடுகளுக்கு எதிராக, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸார், ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த போதிலும், பொலிஸாரின் கோரிக்கைக்கு இடமளிக்காது ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து, பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தரக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கு அமைதியின்மை நிலவியுள்ளது.

இதனையடுத்து, வவுனியா நகரில் அதிகளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுப்படுத்தப்பட்டிருந்ததுடன், கலகத் தடுப்பு பிரிவினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்