பொலிவியா அரசாங்கத்தினால் ஜனாதிபதிக்கு விசேட விருது

பொலிவியா அரசாங்கத்தினால் ஜனாதிபதிக்கு விசேட விருது

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 9:17 pm

சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்காக வழங்கிய ஒத்துழைப்புக்களை வரவேற்கும் வகையில் பொலிவியா அரசாங்கத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு விசேட விருதொன்று வழங்கப்பட்டது.

பொலிவியாவின் அதிவுயர் விருது இதுவென ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

ஜனநாயக பிரதிநிதி மாசேலோ குயிரோகா சென்ட்டா குரூஸ் பாராளுமன்ற விருது நேற்று பொலிவியாவின் லாபெஸ் நகரிலுள்ள தேசிய மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை அந்த சபையின் தலைவர் மற்றும் பொலிவியாவின் உப ஜனாதிபதி அல்வாரோ காசியோ லினேராவினால் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி தெரிவித்த கருத்து:-

“எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவமான விருதின் பெறுமதியை நான் அறிவேன். உங்களினாலும், மதிப்பிற்குரிய சபாநாயகரினாலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.”

பயங்கரவாதத்தை தோற்கடித்து, இலங்கையில் சமாதானம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, இந்த கெளரவமான விருது வழங்கப்பட்டதாக பொலிவியா தெரிவித்துள்ளது.

மனித உரிமை மற்றும் பொலிவியா உள்ளிட்ட தெற்கு அமெரிக்க நாடுகளுடனான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்கின்றமைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக இந்த விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் – கீ – மூனினும் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொராலஸ் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றது.

இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி செயற்பட தாம் தயார் என பொலிவியா ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம், அரசியல், தொழில் துறை  மாத்திரமன்றி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகள் தொடர்பிலும் ஈவோ மொராலஸ் கேட்டறிந்துக் கொண்டுள்ளதுடன், இலங்கையின் ஆடை தொழில்துறை தொடர்பில் அவர் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

தமது இந்த விஜயமானது, தெற்கு அமெரிக்க அரசாங்கத்துடன், இராஜதந்திர தொடர்புகள் மற்றும் பொருளாதார, வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக புதிய ஆரம்பம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, புதிய இனத்தவர்களுடன் நற்புறவை ஏற்படுத்திக் கொள்ளுதல் அரசாங்கத்தின் கொள்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பொலிவியா ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்