கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு பெரும் அமளிக்கு மத்தியில் ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு பெரும் அமளிக்கு மத்தியில் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 8:44 pm

கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு பெரும் அமளிக்கு மத்தியில், ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி தலைமையில், கிழக்கு மாகாண சபை இன்று முற்பகல் கூடியது.

சபை நடவடிக்கைகள் ஆரம்பத்தில் மாகாண சபை உறுப்பினராக பதிவியேற்றுள்ள இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரை வரவேற்ற தவிசாளர், கன்னி உரை நிகழ்த்துவதற்காக அவருக்கு ஐந்து நிமிட சந்தர்ப்பத்தை வழங்கினார்.

எவ்வாறாயினும் இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் மாகாண சபையில் பிரேரணையொன்றை சமர்ப்பிக்க முயன்றதையடுத்து, சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டிருந்தன.

இதன்காரணமாக, மூன்று சந்தர்ப்பங்களில் சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கு தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி நடவடிக்கை எடுத்திருந்தார்.

கிழக்கு மாகாண சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை சபையில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமை தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மாகாண சபையின் தற்போதைய தவிசாளரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் குழுத் தலைவர் ஏ.ஏ.எம் ஜமில் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்