அளுத்கம அமைதியின்மை தொடர்பில் பூரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் -ரணில்

அளுத்கம அமைதியின்மை தொடர்பில் பூரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் -ரணில்

அளுத்கம அமைதியின்மை தொடர்பில் பூரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் -ரணில்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 7:48 pm

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பூரண விசாரணை அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதெனவும் எதிர்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

ஜீன் 15 ஆம் திகதி பேருவளையில் அமைதியின்மை ஏற்படுவதற்கு முன்னர் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டமை மற்றும் பிக்கு ஒருவர் பயணித்த கார் தாக்கப்பட்டமை தொடர்பில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பிக்குவின் கை துண்டிக்கப்பட்டதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சம்பவங்களை தடுப்பதற்கு பதிலாக அதனை மேலும் தீவிரப் படுத்தும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தினார்.

இதன் விளைவாக சொத்துக்களுக்கு பெரும் சேதமும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

15 ஆம் திகதி பொதுபல சேனா உள்ளிட்ட சில அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளியிடங்களில் இருந்து பஸ்களில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் மத வாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் தர்கா நகர் ஊடாக பேரணியாக சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரை தொடர்பான மேலதிக தகவல்களை இன்று இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகும் எமது பிரதான செய்திகளில் எதிர்பாருங்கள்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் டி.எம்.ஜயரத்ன, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்