இலத்திரனியல் ஊடகங்களின் நிரல்படுத்தல் தொடர்பில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் விளம்பர முகவர் நிறுவனங்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு கடிதம்

இலத்திரனியல் ஊடகங்களின் நிரல்படுத்தல் தொடர்பில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் விளம்பர முகவர் நிறுவனங்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 8:53 pm

இலத்தரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் நிரல்படுத்தல் எனப்படும் ரேட்டின்ஸ் தொடர்பில் வெகுசன ஊடகம் மற்றும் தகவல்  அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் தலைமையில் அண்மையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது.

இந்த நிரல்படுத்தலை தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்பில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தது.

தற்போதுள்ள தரவுகளின் பிரகாரம் இந்த நடவடிக்கைக்கு 46 பில்லியன் ரூபா பயன்படுத்தப்படுவதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அண்மையில் வெளியிட்ட கருத்தினால் இந்த விடயத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களின் நிரல்படுத்தல் எனப்படும் ரேட்டின்ஸ் தொடர்பில் எழுந்த கருத்தாடல்களை கவனத்திற்கொண்டு வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் வர்த்தக விளம்பர முகவர் நிறுவனங்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இந்தக் கடிதம் இன்றைய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது.

ஊடகங்களின் நிரல்படுத்தல் எனப்படும் ரேட்டிங்ஸை தயாரிக்கும் நடவடிக்கையுடன் அரசாங்கம் தொடர்புபடவில்லை என்ற விடயம் வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சருடனான கலந்துரையாடலின்போது தெளிவாக குறிப்பிடப்பட்டதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிரல்படுத்தல் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்கவோ  அல்லது அதில் தலையீடு செய்யவோ இடமுள்ளதாக ஒருசில விளம்பர முகவர்கள் மத்தியில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது இலாபத்திற்காக கபடமான முறையில் செயற்படும் சிலரால் இந்த நிலை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதே கெப்பிட்டல் மகராஜா நிறுவனத்தின் தலைவரது கருத்தாகும்.

நம்பகத்தன்மையற்ற, செல்லுபடியாகாத தற்போதைய முறைமையை தொடர்ந்தும் பேணிச் செல்வதே குறித்த தரப்பினரின் நோக்கமாக இருக்கலாம் எனவும் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

அநேகமான நிறுவனங்கள் தமது விளம்பரங்களை பிரசுரிப்பதற்காக குறித்த நிரல்படுத்தலுக்கு அமைய ஊடக நிறுவனங்களை தெரிவு செய்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள் ஆரம்பம்…….

“ரேட்டிங் முறைமை தொடர்பில் அதிக  கவனம் செலுத்தப்படுவதால்,  ஒருசில தரப்பினர் மேலதிக வெகுமதியை வழங்கியுள்ளனர். இதன் மூலம் சந்தையின் உண்மை நிலை  திரிபுபடுத்தப்படுகிறது. முன்னெற்றம் கண்டுவரும் இந்தத் துறையின் நலன் கருதி அந்த திரிபுபடுத்தல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.”

மீண்டும் கவனத்திற்கு

“ரேட்டிங் முறைமை தொடர்பில் அதிக  கவனம் செலுத்தப்படுவதால்,  ஒருசில தரப்பினர் மேலதிக வெகுமதியை வழங்கியுள்ளனர். இதன் மூலம் சந்தையின் உண்மை நிலை  திரிபுபடுத்தப்படுகிறது. முன்னெற்றம் கண்டுவரும் இந்தத் துறையின் நலன் கருதி அந்த திரிபுபடுத்தல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.”

நம்பகத்தன்மையற்ற முறைமையொன்று நடைமுறையில் உள்ளமை இந்த  துறைக்கு நன்மை பயக்காது எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊடகத்துறையில் மாத்திரமல்லாது எந்தவொரு துறையிலும் உள்ள அநீதிக்கு எதிராக ஊடக நிறுவனம் என்ற வகையில் குரல் கொடுப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் மற்றும் முகவர் நிலையங்கள் தமது வர்த்தக நாமங்களால் பெற்றுக்கொள்ளும் வெகுமதியை அனுபவிப்பதைப் போன்று ஊடக நிறுவனங்களுக்கும் வருமானத்தின் நியாயமானளவு கிடைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

தற்காலத்தில் கிடைக்க வேண்டிய வருமானம் அநீதியான ரேட்டிங்ஸ் முறைமையால் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அநீதியான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அந்த மோசடி தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் பின்வாங்கப் போவதில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களிலும் அத்தகைய ஊழல்களை வெளிக்கொணர்வதில் பின்வாங்கிச் செயலாற்றவில்லை என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போதுள்ள நிரல்படுத்தல் அறிக்கை தயாரிக்கும் முறைமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்பதில் இணங்குவீர்கள் என நம்புவதாக வர்த்தக விளம்பர முகவர் நிலையங்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பான தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.

இது தொடர்பான தகவல்கள் “Barbarians at the CSE” தொகுப்பில் வெளியாகியிருந்தது.

மக்களை நேரடியாக பாதிக்கும் ஊழல்களுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டினை வகிப்பதற்கு நாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்