வட மாகாண சபையின் அமர்வு ஒத்திவைப்பு

வட மாகாண சபையின் அமர்வு ஒத்திவைப்பு

வட மாகாண சபையின் அமர்வு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 6:34 pm

நியதிச் சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புகளுக்காக வட மாகாண சபையின் அமர்வு எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபைக்கான நிதி நியதிச் சட்டம், முத்திரை கைமாற்றுச் சட்டம் மற்றும் முதலமைச்சர் நிதிச் சட்டம் உள்ளிட்ட சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ஆளுநருக்கு வட மாகாண சபை இரண்டு வாரகால அவகாசத்தை இன்று வழங்கியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வடக்கு மாகாண சபையின் அதிகாரம் கைப்பற்றப்பட்டு ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த மாகாண சபை நிதி நியதிச் சட்டம் உள்ளிட்ட மேலும் சில சட்டங்களின்றி இயங்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலைமையின் கீழ், மூன்று நியதிச் சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டு அவை தொடர்பிலான முதலாம் வாசிப்பு முழுமையாக நடைபெற்று, அங்கீகாரத்திற்காக வட மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புகளுக்கான விசேட அமர்வு நேற்று இடம்பெறவிருந்த நிலையில் ஆளுநர் மேலும் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், அதனை இன்றைய அமர்வின்போது சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

66 பக்கங்களைக் கொண்ட குறிப்பிட்ட நியதிச் சட்டமூலங்கள் வட மாகாண சபையின் உறுப்பினர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்திலும், அமைச்சரவை கூட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்