இலங்கை மீதான விசாரணைக்கு விசேட நிபுணர் குழு நியமனம் – நவநீதம் பிள்ளை

இலங்கை மீதான விசாரணைக்கு விசேட நிபுணர் குழு நியமனம் – நவநீதம் பிள்ளை

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2014 | 9:15 pm

இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித  உரிமைகள் பேரவையின் 26 ஆவது அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது என ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்தது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமானது.

இலங்கை நேரப்படி இன்று மதியம் 1.30 மணியளவில் ஆரம்பமான இந்த அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது கருத்துக்களை முன்வைத்தார்.

தனது  உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடையும் முன்னர் பேரவையில் அவர் உரை நிகழ்த்தும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும்.

உரையில் அவர் தெரிவித்ததாவது;
[quote]”யுத்த நிறைவின் 5 வருட பூர்த்தியை கடந்த மாதம் இலங்கை கொண்டாடியது. அந்த நாட்டில் பயங்கரவாதம் மற்றும் பிரச்சினைகளால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் குணப்படவில்லை. எனவே, புத்திஜீவிகள் மற்றும் விசேட செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவொன்றை நான் எனது அலுவலகத்தினால் தெரிவு செய்துள்ளேன்.

எமது பேரவையால் வழங்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு ஏற்ப பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பிரச்சினைகள் உக்கிரமடைவது மனித உரிமை மீறல்களுக்கான அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. அதேபோன்று, தமது நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான திட்டங்களை பல அரசாங்கங்கள் இனங்கண்டுள்ளன. அதற்கு பல நாடுகளும் அக்கறையுடன் செயற்படுகின்றன.

எனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள எனது அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. அரசாங்கத்தை விமர்சிப்பதனாலா இவ்வாறு இடம்பெறுகின்றது? மனித உரிமைகளுக்காக முன் நிற்பது இதில் முக்கியமானதல்லவா?

மனிதர்களின் கௌரவம், சமவுரிமை, சுதந்திரம் இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். எனவே, இந்த பின்புலத்தில் உண்மைகளை நாம் பேச வேண்டும் அல்லவா?[/quote]

நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட இந்த விசேட குழு தொடர்பில் ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கருத்து வெளியிட்டார்.

அவர் தெரிவித்ததாவது;

[quote]இந்த பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பு நாடுகளில் அரைவாசிக்கும் குறைவான நாடுகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட ஒரு பிரேரணை மூலம் ஐக்கிய நாடுகளின் ஓர் உறுப்பு நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்திற்கு சவால் விடுத்துள்ளனர்.

இது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயற்பாடாகும். இந்த பிரேரணையில் ஒன்றுக்கு முரணான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், இது தொடர்ந்தும் குழப்பகரமாகவே உள்ளது. இது இலங்கைவாழ் மக்களின் நலன்களுக்கு பாதிப்பான விடயமாகும்.

இந்த பிரேரணையில் தெளிவற்ற விடயங்களை நாம் காண்கின்றோம். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக உள்ளக ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் இங்கு கருத்திற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்தும் ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பில் பக்கசார்பாக நம்பிக்கையின்றியே செயற்படுகின்றது.

எனவே, விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிடம் நம்பிக்கை தொடர்பில் நாம் கேள்வி எழுப்புகின்றோம். அவர்களின் நம்பிக்கை தொடர்பில் தற்பொழுது பிரச்சினைகள் எழுந்துள்ளன. இலங்கை அரசாங்கமும் ஆணையாளர் அலுவலகமும் சமமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனையொன்றை முன்வைப்பது கேலிக்குரிய விடயமாகும். [/quote]

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது அமர்வின் போது இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மீண்டும் நிராகரிப்பதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்திர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் அறிக்கையொன்றில் மூலம் அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கமாட்டாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் மற்றும் பொறுப்புக்கூறும் விடயங்கள் குறித்து அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கை அடைந்துகொள்வதற்காகவும், நாட்டு மக்களின் நலன்களை கருத்திற்கொண்டும் முன்வந்து செயற்படும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்