இலங்கையிடமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கையிடமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2014 | 6:32 pm

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை மீண்டும் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி, தமிழக மீனவர்கள் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று  (10) இரண்டாவது நாளாகவும் தமது பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 82 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்படி, இந்த மீனவர்களின் 16 விசைப்படகுகளை இலங்கை அரசாங்கம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

அத்துடன், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை மற்றும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கையில் கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார்.

எவ்வாறாயினும், இலங்கையில் கைது செய்யப்படுகின்ற தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்காக, மீனவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

எனினும், மீனவர்களின் படகுகளை விடுவிக்குமாறும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் வலியுறுத்தி, நேற்று முதல் காலவரையற்ற பணிப் பகிஷ்கரிப்பை தமிழக மீனவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட போதிலும், இந்தியாவில் தொடர்ந்தும் 103 இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுவிப்பதற்காக ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரின் தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.சதாசிவம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்