இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 1:46 pm

இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு கிழக்கே 120 கடல் மைல்கள் தொலைவில் இரண்டு படகுகளுடன் இலங்கை மீனவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்டிருந்த 750 கிலோகிராம் மீன்களும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 11  இலங்கை மீனவர்களையம் தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்பரப்பில் கைதான இலங்கை மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது,

தேவேந்திரமுனையில் இருந்து கடலுக்குச் சென்ற ஐந்து மீனவர்களும் இவர்களில் அடங்குவதாக திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்தார்.

எனினும் கைது செய்யப்பட்டுள்ள ஏனைய மீனவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 73 இலங்கை மீனவர்கள் ஏற்கனவே தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் 15 படகுகளும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் எவருமே தற்போது இலங்கையில் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் லால் டி சில்வா மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்