மோடியிடம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு, தனிநாட்டுக் கோரிக்கைகளை முன்வைத்தார் தமிழக முதல்வர்

மோடியிடம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு, தனிநாட்டுக் கோரிக்கைகளை முன்வைத்தார் தமிழக முதல்வர்

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 10:05 am

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

புதுடில்லியில் நேற்று இந்திய பிரதமரை சந்தித்த சந்தர்ப்பத்தில், தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், தனிநாட்டினை உருவாக்குதல், ஆகிய விடயங்கள் இந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

64 பக்கங்களை கொண்ட அறிக்கையொன்றை பிரதமரிடம் கையளித்துள்ள ஜெயலலிதா ஜெயராம், கச்சதீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொண்டு,  மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு காவேரி நதி நீர் பெற்றுக்கொள்ளல், கடல் நீர் சுத்திகரிப்பு, கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற பிரச்சினைகள் தொடர்பிலும் இந்திய பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் ஜெயலலிதா ஜெயராமினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், இதற்குமுன்னர் காங்கிரஸ் கட்சியின் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்