இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 6:15 pm

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த 29 தமிழக மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து அவர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், தமிழக மீனவர்களின் ஆறு படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படவில்லை.

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 29 தமிழக மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், இலங்கை – இந்திய நல்லுறவின் வெளிப்பாடாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்