டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம்

டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம்

டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 2:36 pm

கொழும்பு நகரில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்து செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கால் அதிகரித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

அதேபோன்று களுபோவில போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுவதாக, அந்த வைத்தியாசாலையின் பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிடுகின்றார்.

களுபோவில வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு வரை 167 நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் கூறினார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 48 நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருவதாக ராகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மஹிந்த சமரநாயக்க தெரிவித்தார.

இதேவேளை, சடந்த வாரத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 62 சிறுவர்கள் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் லின்டன் பத்மசிறி கூறினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதுதவிர கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது என கொழும்பு மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி குறிப்பிடுகின்றார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சால் பீடிக்கப்பட்ட 10 ஆயிரத்து 923 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

இந்த நிலைமையின் கீழ் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் 35 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயளர்களில் 60 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 15 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக அந்தப் பிரிவு கூறியுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் மேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும், இரண்டு நாட்களை துப்புரவு செய்வதற்கான தினங்களாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ரஞ்ஜித் சோமவங்ச குறிப்பிடுகின்றார்.

பாடசாலைகளின் சூழலை துப்புரவு செய்வதற்கான தினங்களாக திங்கள் மற்றும் வியாழக்கிழமைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது.

டெங்கு காய்ச்சலால் 3 வைத்தியர்களும் தாதி ஒருவரும் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக கண்டி மாநாகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அசோக்க செனரத் தெரிவிக்கின்றார்.

நுளம்பு குடம்பிகளை அழிப்பதற்காக அடையாளங் காணப்பட்ட பகுதிகளுக்கு இரசாயன மருந்து வகைகைளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிடுகின்றது.

நுளம்பு குடம்பிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார நிபுணர் டொக்டர் நயனா டி அல்விஸ் கூறுகின்றார்.

இதற்கு அமைய புகை விசுறுதல் மற்றும் அடையாளங்காணப்பட்ட பிரதேசங்களில் சூழல் துப்புரவு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்