மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு

மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 10:07 pm

மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் மலையகத்திற்கான ரயில் சேவைகளை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு தாமதமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மலையகத்திற்கான ரயில் சேவையில் 280ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் மண்ணுடன் கற்பாறைகள் நேற்று அதிகாலை சரிந்து வீழ்ந்துள்ளமையால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்கள உத்தியோகத்தர்கள் தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகளில் இன்றும் ஈடுபட்டனர்.

மண் சரிவினால் தண்டவாளத்தில் முப்பது அடி வரையில் மண் மற்றும் கல் நிறைந்துள்ளது.

ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவர வேண்டுமாயின் தண்டவாளத்தின் மீது வீழ்ந்துள்ள கற்பாறைகள் உடைக்கப்பட வேண்டும் என்பதால் அருகில் வீடுகள் காணப்படுகின்றமையால் அந்த பணிகளை மிகவும் அவதானமாக முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ஐந்து ரயில்கள் பண்டாரவளை வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது.

இரவு தபால் ரயில், பொடி மெனிக்கே, உடரட மெனிக்கே, விசேட ரயில் மற்றும் பொருட்கள் ஏற்றிச்செல்லும் ரயில் ஆகியன இவற்றில் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, மண்சரிவு காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்ல முடியாமல் மூன்று ரயில்கள் பதுளை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நேற்று இரவு பயணித்த தபால் ரயில் பண்டாரவளையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

விசேட வேன்களை பயன்படுத்தி பண்டாரவளையிலிருந்து பதுளைக்கு தபால்களை கொண்டு செல்லப்படுவதாக தபால் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்