மோடி தலைமையிலான அரசாங்கத்துடன் பணியாற்ற இதயசுத்தியுடன் காத்திருப்பதாக த.தே.கூ தெரிவிப்பு

மோடி தலைமையிலான அரசாங்கத்துடன் பணியாற்ற இதயசுத்தியுடன் காத்திருப்பதாக த.தே.கூ தெரிவிப்பு

மோடி தலைமையிலான அரசாங்கத்துடன் பணியாற்ற இதயசுத்தியுடன் காத்திருப்பதாக த.தே.கூ தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 7:47 pm

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனையோரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை கூடிய விரைவில் வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனின் கையொப்பத்துடன் நரேந்திர மோடிக்கு இன்றைய திகதியிடப்பட்டு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்காகவும், பாரத தேசத்தின் பிரதமர் என்ற உயர் பொறுப்புக்கான நியமனம் குறித்தும் இலங்கை தமிழ் மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக இரா. சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான நேர்மையான உறவுகளை பலப்படுத்துவதற்கும், நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதயசுத்தியுடன் காத்திருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை கொண்டுவருவதாக போர் நிகழ்ந்த காலத்திலும், அதன் பின்னரும் இந்தியாவிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்ததாக நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும், தாம் வழங்கிய வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் நல்லிணக்க முயற்சிகளையும், நிரந்த அமைதி ஏற்படுத்தும் சூழலையும் மேலும் பலவீனப்படுத்தி, எதிர்ப்புணர்வுகளையே தோற்றுவிக்கும் என்பதுடன், இத்தகைய ஒரு நிலைமையை தமிழ் மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை என்றும் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை முடிந்தளவு விரைவாக இந்தியாவின் புதிய பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவது தங்களின் கடமைப்பாடு எனக் கருதுவதாகவும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதியான மற்றும் சமத்துவ அடிப்படையிலான கௌரவமான ஒரு சமாதானம் இலங்கையில் உருவாகும் என்றும், பாரத தேசம் அதனை உறுதிப்படுத்தும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்