யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 7:33 pm

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது.

இன்று கைலாசபதி அரங்கில் ஒன்று கூடிய மாணவர்கள், யுத்தத்தின்போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதால் நாளையும் நாளை மறுதினமும் பல்கலைக்கழக விரிவுரைகளை புறக்கணிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

யுத்தத்தின்போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்ட  நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்காத நிலையில் தமக்கு விடுமுறை வழங்கப்பட்டமை ஏன் என யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சுவரொட்டிகள் கடந்த காலங்களில் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களான தமக்கு அநாமதேய துண்டுப் பிரசுரங்கள் மூலம் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டு, அதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் விரிவுரைகளை புறக்கணிக்கவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதம் மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம்  கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்