போதைப் பொருள் குறித்த ஐ.தே.க வின் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டது

போதைப் பொருள் குறித்த ஐ.தே.க வின் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டது

போதைப் பொருள் குறித்த ஐ.தே.க வின் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2014 | 9:54 pm

போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாறியுள்ளது எனவும், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா, அண்மைக் காலங்களில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார்.

கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரியாக செயற்படுகின்றாரா என அரசாங்கத்திடம் அவர் கேள்வியெழுப்பினார்.

போதைப்பொருள் கடத்தலை நிறுத்த முடியாவிட்டால், அரசாங்கம் பதவி விலகவேண்டும் என ஜோசப் மைக்கல் பெரேரா குறிப்பிட்டார்.

இதன்போது ஆளுந்தரப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உரியவாறு சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன், அதில் அடங்கியுள்ள விடயங்கள் குறித்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சரியான தெளிவினைப் பெற்றிருக்கவில்லை என்று ஏ.எச்.எம். அஸ்வர் கூறினார்.

ஆயினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அடங்கியுள்ள விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து அதனை ஏற்றுக்கொள்ள நேரிட்டதாக அக்ராசனத்திலிருந்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த யோசனையை ஆமோதித்து பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கருத்துத் தெரிவித்தார்.

ஹெரோய்ன் மற்றும் எத்தனோல் கொண்டுவந்தவர்கள் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உரையாற்றியபோது, ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன இடைக்கிடையே குறுக்கிட்டு இடையூறு விளைவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், மூன்று மாதங்களாக அதுகுறித்து எவ்வித பிரச்சினைகளும் எழுப்பப்படாமைக்கான காரணம் யாதெனவும் ரவி கருணாநாயக்க வினவினார்.

இந்த சந்தர்ப்பத்தில் எதிர்கட்சித் தலைவர் குறுக்கிட்டதுடன், கருத்துக்களைக் கூறினார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலத்தை வீணடிப்பதற்காகவே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அக்ராசனத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

ஆளுங்கட்சி உறுப்பினர்களின் இந்த செயற்பாட்டிற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் எதிர்கட்சித் தலைவர், அக்ராசனத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆயினும், பெரும்பான்மையான மக்கள் அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது தெரிவித்தார்.

போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அராங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளாதிருக்க தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது என அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்