அளவ்வ ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நிறைவு

அளவ்வ ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நிறைவு

அளவ்வ ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

20 May, 2014 | 2:16 pm

அளவ்வ ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்துள்ளது.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

இந்த எதிர்ப்பினால், அளவ்வ ரயில் நிலையத்தின் இரு பகுதிகளிலும் சுமார் 20 ரயில்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டதாக ரயில் நிலையத்தின் பேச்சாளரொருவர் கூறினார்.

இதனால் நாடளாவியரீதியில் ரயில் போக்குவரத்தில் இன்று தாமதம் ஏற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

அளவ்வ ரயில் நிலையத்தின் பயணிகள் சிலரினால் மஹோவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலின் சாரதி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ரயில் தாமதமடைந்துள்ளதாகத் தெரிவித்தே, பயணிகள் ரயிலின் சாரதியை தாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக, ரயில் போக்குவரத்து தடைப்பட்டதை அடுத்து, பொலிஸாரின் தலையீட்டினால் ரயில் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு முயற்சித்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு இணங்கவில்லை.

இந்தச் சம்பவத்தினை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் பின்னர் ரயில்வே உத்தியோகத்தர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ரயிலின் சாரதி தாக்கப்பட்ட சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாக லொக்கோமோடிவ் ஒபரேடிங் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் டீ.ஜீ.விஜேரத்ன கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் ரயில்வே அதிகாரிகளின் நிறைவேற்றுக் குழு கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்