ஆணைக்குழுவை நிராகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் பொறுப்பற்றது

ஆணைக்குழுவை நிராகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் பொறுப்பற்றது

ஆணைக்குழுவை நிராகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் பொறுப்பற்றது

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 8:50 pm

தமது ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லாததன் காரணத்தினால், அதனை நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வட மாகாண சபை என்பன எடுத்த தீர்மானம் வருத்தமளிப்பதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

ஆணைக்குழு அதன் செயற்பாடுகளை ஆரம்பித்து, சாட்சி பதிவுகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுத்த சந்தர்ப்பத்திலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் கடந்த பெப்ரவரி மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வட மாகாண சபை என்பன இணைந்து எடுத்த பிரேரணை தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவை நிராகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் பொறுப்பற்றது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஒக்டோபர்,  நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு சிறந்த பதில் கிடைத்ததாகவும், அதன் பலனாக காணமற்போனவர்களின் உறவினர்களால் அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இந்த பதில் ஆணைக்குழுவின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு ஆணைக்குழு முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில், கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம்  மக்களிடையே ஆணைக்குழு மீது சந்தேகத்தினை ஏற்படுத்தும் வகையிலும், எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஆணைக்குழு தற்போது முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பரணகம தெரிவிக்கின்றார்.

ஆணைக்குழு விசாரணைகளை நிறைவுசெய்து, முறைப்பாடுகளை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நீண்ட செயற்பாடுகள் காணப்படுவதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழு, நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்