‘கோச்சடையான்’ ஏன் இன்னும் வெளிவரவில்லை?; அம்பலமானது உண்மை

‘கோச்சடையான்’ ஏன் இன்னும் வெளிவரவில்லை?; அம்பலமானது உண்மை

‘கோச்சடையான்’ ஏன் இன்னும் வெளிவரவில்லை?; அம்பலமானது உண்மை

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 11:23 am

‘கோச்சடையான்’ படத்தைக் கேட்டு ஏராளமானோர் அணுகியதால், மேலும் அதிக பிரதிகளை தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால்தான் படத்தை வெளியிட தாமதம் ஏற்பட்டது என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘கோச்சடையான்’ படத்தை கடந்த மே 9ஆம் திகதி வெளியிட திட்டமிட்டு திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்பட்டது. மொத்தம் 6,000 பிரதிகள் போடப்பட்டு உலகம் முழுவதும் 3,000ற்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் மேலும் 200 திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை திரையிட விரும்பி ஏராளமானோர் தொலைபேசி, கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்தனர். இந்த படத்தை பார்க்க முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வந்தது. சென்னையில் 2 மணி நேரத்திற்குள் 12,500 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

எனவே கூடுதலாக பிரதிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டது. எல்லா திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் திரையிட வேண்டும் என்பதால் திரைப்பட வெளியீட்டு திகதியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மே 23ஆம் திகதி இத்திரைப்படம் திரைக்கு வருவது உறுதி என்று ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வங்கிக் கடன் பிரச்சினை?
இந்நிலையில் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டதாலேயே படத்தை வெளியிட காலதாமதமானதாக கூறப்படுகிறது. படத்தை தயாரிக்க தனியார் வங்கி ஒன்றிருந்து 41 கோடி (இந்திய ரூபாய்) வாங்கியதாகவும், அந்த கடனை எதிர்வரும் 16ஆம் திகதிக்குள் திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடி தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, எல்லா பிரச்சினையும் முடிந்து படம் மே 23ஆம் திகதி வெளியாகும் என விநியோகஸ்தர்கள் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். ஒரு வேளை பிரச்சினை தீரவில்லையென்றால் ஜூன் 6ஆம் திகதி வரை பொறுத்திருப்பது, இல்லையேல் படத்தை வாங்கவேண்டாம் என விநியோகஸ்தர்கள் தரப்பில் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொலிவுட்டில் பல படங்களை தயாரித்தும், வாங்கி வெளியிட்டும் வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தினர், ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்துள்ள ஈரோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து அடுத்தடுத்து 3 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த நிறுவனமே ‘கோச்சடையான்’ படத்தை வெளியிட உதவி செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

-The Hindu-


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்