மறைந்திருந்து தாக்குதல்; மீகமயில் பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை

மறைந்திருந்து தாக்குதல்; மீகமயில் பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2014 | 8:58 pm

வெலிபன்ன மீகம பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (13) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டுள்ள தொன் சுமித் ஆனந்த குணசேகர மீகம தர்கா நகரைச் சேர்ந்தவர்.

50 வயதான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்  மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அவர் அளுத்கம  பொலிஸ் நிலையத்திற்குரிய தர்கா நகர் பொலிஸ் காவலரணில் சேவையாற்றி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு அவரது வீட்டருகில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது அங்கிருந்த ஒருவருடன் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த முறுகல் நிலையை அடுத்து சந்தேகநபர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தமது புதல்வர்களுடன் உபசார நிகழ்விற்கு வந்த பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டிற்கு அருகில் மறைந்திருந்து அவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன் போது பொலிஸ் கான்ஸ்டபிளின் மகனொருவரும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த இருவரையும் தர்கா நகர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வெலிபன்ன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி  முதல் இதுவரை பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட 140 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த தாக்குதல்களில் 4 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்