மக்களவைத் தேர்தல் 2014; 66 வீத வாக்குப் பதிவு, பா.ஜ.கவிற்கு வெற்றி வாய்ப்பு

மக்களவைத் தேர்தல் 2014; 66 வீத வாக்குப் பதிவு, பா.ஜ.கவிற்கு வெற்றி வாய்ப்பு

மக்களவைத் தேர்தல் 2014; 66 வீத வாக்குப் பதிவு, பா.ஜ.கவிற்கு வெற்றி வாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 7:30 am

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணியே ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

9 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேற்று  நிறைவடைந்ததன் பின்னர், சில முக்கிய ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சியமைக்க 543 தேர்தல் தொகுதிகளில், 272 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணி 249 தொடக்கம் 290 வரையான தேர்தல் தொகுதிகளை கைப்பற்றலாம் என கருத்துக்கணிப்புக்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 101 தொடக்கம் 148 தொகுதிகளையும், மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய ஏனைய கட்சிகள் 146 முதல் 156 தொகுதிகளை கைப்பற்றலாம் என கருதப்படுகின்றது.

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புக்கள் குறிப்பிடுகின்றன

இதேவேளை, இந்திய மக்களவைத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்களிப்பில் 66.38 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது

இந்திய மக்களவைத் தேர்தலொன்றில் இதுவரை அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இதுவென  தெரிவிக்கப்படுகிறது.

இதற்குமுன்னர் 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டத்தின் போது பதிவான 64.01 வீத வாக்குப்பதிவே அதிக வாக்குப்பதிவாக காணப்பட்டது.

அதேவேளை இந்தியாவில் 9 கட்டங்களாக இடம்பெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 66 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்