நடிகரின் கொலையை மறைக்க துணை நடிகை பொலிஸில் போலி முறைப்பாடு; விசாரணைகளில் வெளியானது உண்மை

நடிகரின் கொலையை மறைக்க துணை நடிகை பொலிஸில் போலி முறைப்பாடு; விசாரணைகளில் வெளியானது உண்மை

நடிகரின் கொலையை மறைக்க துணை நடிகை பொலிஸில் போலி முறைப்பாடு; விசாரணைகளில் வெளியானது உண்மை

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 9:30 am

திருநெல்வேலியைச் சேர்ந்த புதுமுக நடிகர் கொலையை மறைக்க, அவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்து நாடகமாடிய துணை நடிகையை பொலிஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்ட் பீட்டர் பிரின்சோ (37). கணினி மையம் நடத்தி வந்த இவர், இணையதளம் மூலம் உணவுப் பொருள் விற்பனை செய்யும் தொழிலும், திரைப்படங்கள் தயாரிப்பதற்கு நிதியுதவியும் செய்து வந்தார். “காகிதபுரம்’ என்ற படத்திலும் நடித்தாராம்.

அப்போது, துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் ரொனால்ட் பீட்டருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே, இணையதளம் மூலம் ரொனால்ட் பீட்டருடன் சேர்ந்து தொழில் செய்து வந்த அவரது நண்பர் திருநெல்வேலியைச் சேர்ந்த உமாசந்திரன், ரொனால்ட் பீட்டரிடம் பணம் கேட்டாராம். ஆனால், அவர் பணம் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில், ஸ்ருதி சந்திரலேகாவுக்கும் ரொனால்ட் பீட்டருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஸ்ருதியும், உமாசந்திரனும் சேர்ந்து ரொனால்ட் பீட்டரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, ரொனால்ட் பீட்டரின் கார் ஓட்டுநர் ஜோன் பிரின்சன் உதவியுடன் ரொனால்ட் பீட்டரை கடந்த ஜனவரி 18ஆம் திகதி சென்னையில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர், காரில் அவரது உடலை திருநெல்வேலிக்கு கொண்டு வந்து பாளையங்கோட்டை ஆசீர்வாதபுரத்தில் புதைத்துள்ளனர்.

ரொனால்ட் பீட்டரை கொலை செய்ததை மறைக்கத் திட்டமிட்ட ஸ்ருதி சந்திரலேகா, அவரை காணவில்லை என மதுரவாயல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து நாடகம் ஆடியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ரொனால்ட் பீட்டர் உடலைப் புதைக்க உமாசந்திரனின் நண்பர்களான பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரபீக் உஸ்மான், ஆனஸ்ட்ராஜ், விஜய் ஆகியோர் கணிசமான தொகையைப் பெற்றுக் கொண்டு உதவி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்கொலை வழக்கில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவும், திருநெல்வேலியைச் சேர்ந்த நிர்மல் என்பவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்