தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முடிவு

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முடிவு

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 4:48 pm

 

மகப்பேற்று பயிற்சி தொடர்பில் எழுந்த பிரச்சினையை  அடிப்படையாக கொண்டு   முன்னெடுக்கப்படுகின்ற  தொழிற்சங்க நடவடிக்கையை இன்றுடன் முடிவுக்கு கொண்டு வருவதாக அரச சேவை  ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவிக்கின்றார்.

இதற்கமைய தமது சங்கத்தைச் சேர்ந்த தாதி உத்தியோகத்தர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புவார்கள் என தேரர் சுட்டிக்காட்டினார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோதே அரச சேவை  ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

மகப்பேற்று பயிற்சி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கமும் அகில இலங்கை தாதியர் சங்கமும் அறிவித்துள்ளன.

மகப்பேற்று பயிற்சி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை என அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார்

தாதியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளுக்கு இன்றும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது

கொழும்பு தேசிய வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, திருகோணமலை பொது வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பெரும்பாளான வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, தாதியர் பணி பகிஷ்கரிப்பினால் தமக்கான குருதி மாற்று சிகிச்சைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவித்து சிறுநீரக நோயாளர்கள் சிலர் இன்று காலை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று பகல் நிறைவுபெற்றது.

நோயாளர்களுடன் பொலிஸார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான அவசர சிகிச்சைகளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் ஒன்றான அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்