பாரத்த லக்ஸ்மன் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்

பாரத்த லக்ஸ்மன் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்

பாரத்த லக்ஸ்மன் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 7:02 pm

பாரத்த லக்ஸ்மன் பிறேமசந்திர உள்ளிட்ட நால்வர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மேல் நீதிமன்றத்திற்கு மாற்ற கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கின் சாட்சி விசாரணை நிறைவுக்கு வந்ததை அடுத்து நீதவான் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பாரத்த லக்ஸ்மன் பிறேமசந்திர உள்ளிட்ட நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமாஅதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானதாகவும் சிகிச்சை பெறுவதற்காகவே அவர் வெளிநாட்டிற்கு சென்று சில மாதங்களின் பின்னர் நாடு திரும்பியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துமிந்த சில்வா இந்த வழக்கின் பிரதிவாதி அல்லவெனவும் அவர் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் எனவும் சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.

ஆகையால் அவரை பிரதிவாதியாக குறிப்பிடக் கூடாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சி்ல்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த நால்வரின் கொலை தொடர்பில் 13 பிரதிவாதிகளுக்கும் எதிராக சாட்சியங்கள் உள்ளதாக சாட்சிகளை விசாரித்த மேலதிக நீதவான் பிரியந்த லியனகே தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய வழக்கு விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக நீதவான் அறிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் எட்டாம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றபோது கொலன்னாவ பகுதியில் குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்