சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு, தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி

சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு, தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி

சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு, தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 12:10 pm

மறைமுக நோக்கங்களுடன் கொண்டுவரப்படும் சூழ்ச்சிகளை ஒற்றுமையாக முறியடித்து தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நாட்டில் உழைக்கும் மக்களுக்குத் தேவையான சாதகமான ஜனநாயக சூழல், தொழில் இடத்தில் அமைதியான சூழ்நிலை மற்றும் நிறுவனமயப்படும் வகையிலான சட்ட உரிமைகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தனது மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் நட்புடைய அரசாங்கம் என்ற வகையில், உழைக்கும் மக்களுக்கு சுதந்திரமானதும், ஜனநாயகபூர்வமானதுமான மே தினத்தை வழங்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டின் உழைக்கும் சக்திகளை குழப்பும் வகையிலான சூழ்ச்சிகள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களை வெற்றிகொள்வதற்கு நாட்டின் உழைக்கும் மக்கள் அரசாங்கத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தொழிலாளர்களின் இரத்தம், வியர்வை ஆகியவற்றால் பெற்றுக்கொண்ட தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க மே தினத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென பிரதமர் டி.எம் ஜயரத்ன குறிப்பிடுகின்றார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தொழிலாளர் வர்க்கத்தை தவறான வழிக்குத் திசைதிருப்பும் சூழ்ச்சிகளை தோல்வியடையச் செய்ய வேண்டுமென பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் கட்டியெழுப்பப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், உழைக்கும் மக்களின் ஜக்கியத்தை காட்டும் வகையில் மே தினத்தை கொண்டாட வேண்டுமென பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை அரசாங்கம் படிப்படியாக இல்லாது செய்வதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம், சமத்துவம், தேசிய ஒற்றுமை மற்றும் நியாயம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் புதிய சமூகத்தின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழில் இடங்களில் காணப்படும் தொழிலாளர் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்பன நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றியுள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்