கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 12:25 pm

மே தினத்தை முன்னிட்டு, கொழும்பு நகரில் நடைபெறவுள்ள கூட்டங்கள் மற்றும் பேரணிகள் காரணமாக சில வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், சில வீதிகளின் ஊடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் 17 ஊர்வலங்களும், 15 பேரணிகளும் நடைபெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், தாமரைத் தடாகம் அரங்கிற்கு அருகிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.

அங்கிருந்து கன்னங்கர மாவத்தை, கண் வைத்தியசாலை சந்தி, டீன்ஸ் வீதி, மருதானை சந்தி, புஞ்சி பொரளை சந்தி, பொரளை சந்தி மற்றும் பேஸ்லைன் வீதி ஊடாக கூட்டமைப்பின் ஊர்வலம் கெம்பல் வீதியை சென்றடையவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் அம்பாறை நகரில் நடைபெவறுள்ளது.

கட்சியின் பதில் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகவட 2 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மக்கள் ஜக்கிய முன்னணியின் மே தின ஊர்வலம் ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி, பொரளை முச்சந்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்துடன் இணையவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தின கூட்டம் ஹவ்லொக் சுற்றுவட்டம் பீ. ஆர். சி மைதானத்தில் நடைபெறுவதுடன், தெகிவளை எஸ். டி எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மே தின கூட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அவர்களின் ஊர்வலம் கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆரம்பமாகி, கொம்பனித் தெரு, யூனியன் பிளேஸ் ஊடாக ஹைட் பார்க் மைதானத்தை சென்றடையவுள்ளது.

ஐக்கிய சோசலிச கட்சியின் மே தின கூட்டம் கிரான்ட்பாஸ் கொக்கஸ் சந்தியிலும், நவ சமசமாஜக் கட்சியின் கூட்டம் குணசிங்கபுர மைதானத்தில் நடைபெறுகின்றது.

ஜனநாயகக் கட்சியின் மே தின கூட்டம் பெலவத்த புத்தசாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், கோட்டே முச்சந்தியில் அவர்களின் ஊர்வலம் ஆரம்பமாகின்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் மே தின கூட்டம் ஜிந்துப்பிட்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஹட்டன் நகரில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டமும், தலவாக்கலையில் மலையக மக்கள் முன்னணியின் கூட்டமும், பண்டாரவளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வின் கூட்டமும் நடைபெறுகின்றது.

வடக்கிலும் மே தினத்தை முன்னிட்டு, இரண்டு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மே தின கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, பேஸ்லைன் வீதியில் சந்தியில் இருந்து பொரளை சந்தி வரையில், 12 மணிமுதல் கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் நிறைவடையும் வரை, வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஊர்வலம் ஆரம்பமானதன் பின்னர், பொரளை சந்தியின் ஊடாக பேலியகொட நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் கனத்தை சுற்றுவட்டம், பௌத்தாலோக்க மாவத்தை, தும்முல்லை, காலி வீதி, புறக்கோட்டை ஊடாகப் பயணிக்க முடியும்.

கண்டி வீதியில் இருந்து பொரளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் இங்குறு கடை சந்தி, ஆமர் வீதி, புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேசன் வீதி, தும்முல்லை வீதி ஊடாகப் பயணிக்க முடியும்.

கண்டி வீதியில் இருந்து நாரஹென்பிட்டி, ராஜகிரிய, நுகேகொடை நோக்கிப் பயணிக்கும் தனியார் வாகனங்கள் மே தின ஊர்வலங்கள் நிறைவடையும் வரையில், ஒருகொடவத்தையில் வலதுபுறம் திரும்பி, பொலிஸ் நிலையத்திற்கு அருகாக கொலன்னாவை வீதி, வெலிகடை ஊடாக பயணிக்க முடியும்.

ராஜகிரிய, நுகேகொடை, நாரஹென்பிட்டியில் இருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் இந்த வீதிகளைப் பயன்படுத்த முடியும்.

இதேவேளை, மே தின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை கருத்திற்கொண்டு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் மார்க்கங்களிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, 138, 120, 170, 164, 122, 150 இலக்க பஸ்கள் நகர சபையின் ஊடாக கொழும்பிற்கு பிரவேசிக்கும் போது, தும்முல்லை, பம்பலப்பிட்டி சந்தி, கொள்ளுப்பிட்டி, பித்தளைச் சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, பிறேபுரூக் பிளேஸ், ஹைட்பார்க் கோர்ணர் ஊடாக யூனியன் பிளேசுக்கு வருகைதந்து டீ.பி ஜயா மாவத்தை அல்லது கொம்பனித் தெரு ஊடாக பயணிக்கமுடியுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிக்கும் வாகனங்கள் மாலம்பே, கடுவெல, வெல்லம்பிட்டி ஊடாக கண்டி வீதிக்கு பிரவேசிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் இருந்து தெற்கு அதிவேக வீதிக்குள் பயணிக்கும் வாகனங்கள் பேலியகொடை, களனி, அத்துறுகிரிய ஊடாக கொட்டாவைக்கு பயணிக்க முடியுமென பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்