வட மாகாண சபையின் 8ஆவது அமர்வு; பல்வேறு பிரேரணைகளும் முன்வைப்பு

வட மாகாண சபையின் 8ஆவது அமர்வு; பல்வேறு பிரேரணைகளும் முன்வைப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 9:10 pm

வட மாகாண சபையின் 8ஆவது அமர்வு,  தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கைதடியிலுள்ள வட மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.

வட மாகாண சபையின் புதிய உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் புதிதாக நியமிக்கப்பட்ட எஸ் தவராசா, சபை நடவடிக்கைகளில் இன்று கலந்துகொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட கே.கமலேந்திரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்தும், வட மாகாண சபையின் உறுப்புரிமையிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே வட மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.தவராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய அமர்வுகளில் கலந்துகொண்டிருந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவரின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் வட மாகாண சபையின் இன்றைய அமர்வுகளில், புதிதாக நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எஸ் தவராசா, தனது கன்னி உரையை நிகழ்த்தினார்.

வட மாகாண சபையின் இன்றைய அமர்வுகளின் போது பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன்படி, யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் குறித்த பிரேரணை, விவசாய அமைச்சர் பி.ஐங்கரநேசனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன், யாழ். பல்கலைக்கழகத்திற்குள் இராணுவத்தினரின் அத்துமீறிய பிரவேசம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து, வட மாகாண சபையில் இன்று பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.

வட மாகாண சபையில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் தேசிய கொடியுடன், வட மாகாண சபையின் கொடியும் ஏற்றப்பட வேண்டும் என மற்றுமொரு பிரேரணை ஊடாக வலியுறுத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்