புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்கும் நடவடிக்கை தொடர்பில் 65 பேர் கைது

புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்கும் நடவடிக்கை தொடர்பில் 65 பேர் கைது

புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்கும் நடவடிக்கை தொடர்பில் 65 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 7:29 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்கும் நடவடிக்கை தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய கடந்த இரண்டு மாதங்களில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஐவர் விடுவிக்கப்பட்டதாகவும் ஏனையவர்கள் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 10 பெண்களும் அடங்குவதாக தெரிவித்த அவர், இதில் 8 பேர் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேர் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைதிகளுக்கும், சந்தேகநபர்களுக்கும் உள்ள அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த 65 பேரும் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்ப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இருவர் பளை பகுதியில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே கோபி மற்றும் தேவியர் ஆகியோர் தொடர்பான தகவல் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதன் தொடர்ச்சியாகவே குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்