பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு; ஏப்ரல் 24 சபை மீண்டும் கூடும்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு; ஏப்ரல் 24 சபை மீண்டும் கூடும்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 6:02 pm

பாராளுமன்றத்தில் உரிய கோரம் இன்மையினால் இன்றைய நாளுக்கான சபை நடவடிக்கைகள் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களுக்குள் நிறுத்தப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அக்ராசனம் சபை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானித்தது.

சம்பூர்  மின் உற்பத்தி நிலையம்,  நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் இலங்கை மின்சார சபையுடன் தொடர்புடைய  சில கேள்விகள் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது கருத்து வெளியிட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச் அஸ்வர் சபையில் கோரம் இல்லையென சுட்டிக்காட்டினார்.

இந்த போது அக்ராசனத்தில் வீற்றிந்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி பாராளுமன்ற உறுப்பினர்களை சபைக்கு வரவழைப்பதற்கான மணியோசையை எழுப்பினார்.

எவ்வாறாயினும் மணியோசை நிறுத்தப்பட்ட சந்தர்ப்த்திலும் சபையில் 17 உறுப்பினர்கள் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தனர்.

பாராளுமன்றத்தில் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அக்ராசனத்தில் இருக்கும் உறுப்பினர் உள்ளிட்ட 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதற்கமைய சபை நடவடிக்கைகளை முன்னெடுபப்தற்கு போதுமான அளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகாமையினால் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதற்கு பிரதி சபாநாயகர் தீர்மானித்தார்.

இதற்கமைய இம்மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்றம் மீ்ண்டும் கூடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்