பணிக்கொடை செலுத்துவதற்காக வாழைச்சேனை கடதாசி ஆலையின் சொத்துக்கள் பறிமுதல்

பணிக்கொடை செலுத்துவதற்காக வாழைச்சேனை கடதாசி ஆலையின் சொத்துக்கள் பறிமுதல்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 7:09 pm

வாழைச்சேனை கடதாசி ஆலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஒருவருக்கு பணிக்கொடை செலுத்துவதற்காக, ஆலையின் உழவு இயந்திரம் உட்பட இரண்டு வாகனங்கள் இன்று அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பணிக்கொடை கிடைக்காத ஒருவர் சார்பாக பணிக்கொடை சட்டத்திற்கமைய தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் பின்னர், கடதாசி ஆலையின் சொத்துகளை விற்றேனும் ஓய்வுபெற்ற ஊழியருக்குரிய 5,42,000ரூபா பணிக்கொடையை செலுத்துமாறு கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய, நீதிமன்ற உத்தியோகத்தர்கள் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை இன்று பறிமுதல் செய்ததாக மட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்கள அலுவலக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இன்றிலிருந்து 15 நாட்களுக்குள் ஓய்வுபெற்ற ஊழியருக்கான பணிக்கொடையை செலுத்தி வாகனங்களை மீள பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இல்லையெனில், அந்த வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு பாதிக்கப்பட்டவரின் பணிக்கொடை நிதி செலுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையில் இருந்து ஓய்வுபெற்ற 48 ஊழியர்கள் தமக்கான பணிக்கொடை வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்கள அலுவலகத்தில் முறைபாடுகள் முன்வைத்துள்ளனர்.

இதன் பிரகாரம் ஊழியர் பணிக்கொடை சட்டத்திற்கமைய பாதிக்கப்பட்ட 48 ஓய்வுபெற்ற ஊழியர்கள் சார்பாகவும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது, செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு வாழைச்சேனை கடதாசி ஆலையின் அதிகாரிகள் உட்பிரவேசிக்க அனுமதி வழங்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்