பயனற்ற நிலையில் வீடமைப்புத் திட்டம்; வீடற்ற நிலையில் பிரதேச மக்கள்!

பயனற்ற நிலையில் வீடமைப்புத் திட்டம்; வீடற்ற நிலையில் பிரதேச மக்கள்!

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2014 | 9:57 pm

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்புத் திட்டம் பயனற்றுப் போகும் நிலை உருவாகியுள்ளது.

ஏ-9 வீதியில், 231ஆவது கிலோமீற்றர் பகுதியில் உள்ள பனிக்கன்குளத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

‍வீடமைப்புப் பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சு  மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அனுசரணையில்
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தின், 50 அரச உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டு, வீடமைப்புக்காக அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டது.

அத்துடன், ஒரு இலட்சம் ரூபா மானியமாகவும், இரண்டு இலட்சம் ரூபா கடனாகவும் வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு  3 வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை எவரும் குடியேறாமல் உள்ளனர்.

இந்த நிலையில், பனிக்கன்குளம் கிராமத்தில் 40 வருடங்களுக்கும் அதிகமாக வசித்து வரும் பலர் நிரந்தர வீடுகள் இன்றி அல்லலுறுகின்றனர்.

தம்மிடம், காணி உறுதிப்பத்திரங்கள் இல்லை எனும் காரணத்தால் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பனிக்கன்குளத்தில் இலவசமாக காணிகள் வழங்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் எவரும் வசிக்காமல் இருப்பது தமக்கு வேதனையளிப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது தவிர, இந்த கிராம மக்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்