சத்தம் இல்லாத அரச பயங்கரவாதம் வடக்கு, கிழக்கில் இடம்பெறுகிறது – பா.அரியநேந்திரன்

சத்தம் இல்லாத அரச பயங்கரவாதம் வடக்கு, கிழக்கில் இடம்பெறுகிறது – பா.அரியநேந்திரன்

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2014 | 9:37 pm

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் முன்னெடுக்கும் சுற்றிவளைப்புகள் காரணமாக மக்கள் நிம்மதியின்றி வாழ்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றியபோது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்ததாவது;

“பயங்கரவாதம் என்கிற போர்வையில்தான் ஏற்கனவே ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டது.

[quote]உண்மையில் ஒரு ஒடுக்கப்பட்ட இனம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமைகளைக் கேட்கின்றபோது அதை பயங்கரவாதம் என்கின்ற பூச்சாண்டிக்குள் கொண்டுவருவதுதான் நாட்டிலே மாறி மாறி நடக்கின்ற ஓர் துன்பியல் நிலையாக இருந்துகொண்டிருக்கிறது.[/quote]

வட கிழக்கில் எங்கும் எந்த நேரத்திலும் எவரும் சென்று வரலாம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் வட கிழக்கிலே இருக்கின்ற மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா என்றால் இல்லை. சுற்றிவளைப்பு இடம்பெறுகின்றது. அங்கே இருக்கின்ற மக்களை அவர்கள் பலாத்காரமாக சோதனை செய்கின்றார்கள். துப்பாக்கிச்சத்தம் இல்லை. ஆனால் சத்தம் இல்லாத அரச பயங்கரவாதம் அங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நடந்தது? ஒரு தாயும் ஒரு மகளும் அங்கே கைது செய்யப்பட்டார்கள். கட்சியைப் பிரிக்கின்ற அரசாங்கம் இப்போது குடும்பத்தையும் பிரிக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த அவலங்களை கூறுகின்றபோது நாங்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றோம்,” என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்