மனோகணேசனை வளர்த்து விட்ட எனக்கு இவ்வாறு செய்வது துரோகச் செயல் – என்.குமரகுருபரன்

மனோகணேசனை வளர்த்து விட்ட எனக்கு இவ்வாறு செய்வது துரோகச் செயல் – என்.குமரகுருபரன்

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2014 | 7:41 pm

கட்சியின் அரசியற்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் என்.குமரகுருபரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அவர் கட்சியின், பிரதித் தலைவர் பதவியிலிருந்து உடன்அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பிரதித் தலைவராக வேலனை வேணியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக ஏற்றுக்கொள்ளாது பொறுப்புவாய்ந்த பதவியில் இருந்துகொண்டு கட்சியின் தீர்மானங்களை பகிரங்கமாக விமர்சித்தல், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின்னரும் தனக்கிருக்கும் கூட்டுப்பொறுப்பை பகிரங்கமாக மீறி, கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் குமரகுருபரன் செயற்பட்டுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் என். குமரகுருபரனின் கட்சி அங்கத்துவம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள், என்.குமரகுருபரன் விளக்கமளிக்கத் தவறும் பட்சத்தில் முழு அளவில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என ஜனநாயக மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் எந்தவொரு அமைப்பும் என்.குமரகுருபரனுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது எனவும், ஜனநாயக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவம் செய்து என்.குமரகுருபரன் செயற்படக் கூடாது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு, கட்சியின் பொறுப்பு வாய்ந்த பிரதித் தலைவர் பதவியை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையில், ஜனநாயக மக்கள் முன்னணி பெற்றுக் கொண்ட ஆசனங்கள் தொடர்பில் அரசாங்க பத்திரிகையொன்றுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கிய செவ்வியொன்றை என்.குமரகுருபரன் வழங்கியுள்ளதாகவும் அந்த முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்ந்தும் இவ்வாறு அவர் செயற்படுவாராயின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனநாயக மக்கன் முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து என்.குமரகுருபரன் நியூஸ் பெஸ்ட்டிற்கு கருத்துத் தெரிவித்தார்.

என்.குமரகுருபரன் தெரிவித்ததாவது;

“இது சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும். ஏனென்றால், கூட்டம் கூட்டுவதற்கு காலவகாசம் கொடுக்கப்பட வேண்டும். இப்படியொரு பிரேரணை கொண்டு வருவது என்பது, நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கு குறிப்பிட்ட காலம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றையெல்லாம் விடுத்து, இரவோடு இரவாக கட்சி கூடி, கட்சி தலைவருக்கு முடிவெடுப்பதற்கான தீர்மானத்தை வழங்கி, என்னை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாகவும் பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக என்னை நீக்கிய முறைமை பிழையானது. என்மீது சுமத்தப்படுகின்ற இரண்டு குற்றச்சாட்டுக்களுமே ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானவைகள். கடந்த மாகாண சபைத் தேர்தலிலே நான்கு தமிழ் பிரதிநிதிகள் இருந்தார்கள். இன்றைக்கு அவை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு நாமும் காரணமோ என்ற கேள்வியைத் தான் நான் தொடுத்திருந்தேன்.

இந்த சாணக்கிய தோல்வியை எடுத்துக் குறிப்பிடுவது தவறா, இது கட்சிக்குத் துரோகம் இழைப்பதா, என்பது தான் என்னுடைய கேள்வி. மனோகணேசனை வளர்த்து விட்ட எனக்கு இவ்வாறு செய்வது என்பதை ஒரு துரோக செயலாகக் கருதுகின்றேன்,” என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்