உற்சாக வரவேற்போடு உலா வந்தனர் இலங்கை சாம்பியன்கள் (வீடியோ)

உற்சாக வரவேற்போடு உலா வந்தனர் இலங்கை சாம்பியன்கள் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2014 | 9:13 pm

பதினெட்டு வருடங்களின் பின்னர் உலக சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை இருபதுக்கு 20 அணி உற்சாக வரவேற்புக்கு மத்தியில் இன்று நாடு திரும்பியது.

இலங்கை அணி வீரர்கள் கட்டுநாயக்கவில் இருந்து திறந்த வாகனத்தில் காலி முகத்திடலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை, லசித் மாலிங்கவை திடீரென இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவராக நியமித்தமை நாட்டுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் என்று தேசிய கிரிக்கெட் குழுத்தலைவரான சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.

பங்களாதேஷிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய சந்தர்ப்பத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

“96 ஆம் ஆண்டு வெற்றிக்குப் பின்னர் எமக்கு உலக சாம்பியன் பட்டமொன்றை வெற்றிகொள்வதற்கு நாம் சுமார் 18 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த வெற்றியானது நாம் எல்லோரும் அதாவது முழு இலங்கையரும் பார்த்திருந்த ஒன்று. இந்த இரண்டு உலக சாம்பியன் பட்டங்களிலும் பங்களிப்பு வழங்க கிடைத்ததையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அணித்தலைவரான டினேஷ் சந்திமால் இன்றி கடைசி மூன்று போட்டிகள் விளையாடும் தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது. இலங்கைக்காக அந்தத் தீர்மானத்தை அணி எடுத்தது. இது தொடர்பில் அணித்தலைவர் என்ற ரீதியில் சந்திமாலுடனும் கலந்துரையாடினோம். அவரும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார் என்றே நான் நினைக்கிறேன். தேர்வுக் குழுத்தலைவர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட்டுக்காக எனக்கு அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது.”
இறுதிப் போட்டியை வெற்றிகொள்ள டினேஷ் சந்திமாலின் திட்டம் மிகுந்த உந்துசக்தியாக அமைந்தது என இலங்கை இருபதுக்கு 20 அணியை சாம்பியனாக வழிநடத்திய அணித்தலைவர் லசித் மாலிங்க கூறினார்.

நாடு திரும்பிய பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.​

“இந்திய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவான வகையில் அணித்தலைவர் என்ற ரீதியில் நான் மிகுந்த அதிஷ்டசாலி என்றே நினைக்கின்றேன். ஏன் என்றால், அவர்களுடன் 6 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் எனக்குள்ளது. அவர்கள் எத்தருணத்தில் எவ்வாறு விளையாடுவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். சிறந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணியை 130 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த ஐ.பி.எல் போட்டிகள் எனக்கு பெரிதும் உதவின என்றே நான் நினைக்கின்றேன்,” என்றார் லசித் மாலிங்க.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்