குராம் ஷேக் கொலை வழக்கு; மூன்றாவது பிரதிவாதி முரணான கருத்து, தொடர்ந்தும் விளக்கமறியலில்

குராம் ஷேக் கொலை வழக்கு; மூன்றாவது பிரதிவாதி முரணான கருத்து, தொடர்ந்தும் விளக்கமறியலில்

குராம் ஷேக் கொலை வழக்கு; மூன்றாவது பிரதிவாதி முரணான கருத்து, தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 6:56 pm

பிரித்தானிய பிரஜை குராம் ஷேக் கொலை செய்யப்பட்டு அவரது காதலியான ரஷ்ய யுவதி விக்டோரியா அலெக்ஸான்ட்ரா குழுவாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தின் மூன்றாவது பிரதிவாதியான தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் புஷ்பசந்திர விதானபத்திரன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றபோது வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான தங்காலை பிரதேச சபையின் தலைவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொள்ள நேரிட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வல்கம இன்று தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மூன்றாவது பிரதிவாதியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குராம் ஷேக் கொலை செய்யப்பட்டு அவரது காதலி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியாளரான தங்காலை ஹோட்டலின் முகாமையாளரான பெண் சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததால் வழக்கில் எதிர்பாராத சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்நாளில் முறையாக சாட்சியமளித்த குறித்த பெண், நேற்று முதல் சுகயீனமுற்றுள்ளதாகவும் அவருக்கு சேலய்ன் ஏற்றப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமக்கு அறிவித்துள்ளதாக முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி துசித் முதலிகே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் நீதிமன்ற விடுமுறை காலம் என்பதால் தமது தரப்பினருக்கு அநீதி ஏற்படலாம் எனவும் இதனை கருத்திற் கொண்டு அவர்களுக்கு பிணை வழங்குமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளும் நோக்கிலேயே பிரதிவாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், இது அவர்களுக்கு விதிக்கப்பட்ட  தண்டனை அல்லவெனவும் மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வரை அவர்களை நிரபராதிகளாக கருதும் உன்னத கோட்பாட்டினை தாமும் பின்பற்றுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது பிரதிவாதி தொடர்பிலும் தாம் அதே நிலைப்பாட்டில் உள்ளதாக நீதிபதி ரோஹினி வல்கம தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்