ராஜிவ் காந்தி கொலை எவராலும் மறந்துவிட முடியாத மிலேச்சத்தனமான செயல் – இந்திய மத்திய அரசு

ராஜிவ் காந்தி கொலை எவராலும் மறந்துவிட முடியாத மிலேச்சத்தனமான செயல் – இந்திய மத்திய அரசு

ராஜிவ் காந்தி கொலை எவராலும் மறந்துவிட முடியாத மிலேச்சத்தனமான செயல் – இந்திய மத்திய அரசு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 2:52 pm

ராஜிவ் காந்தி கொலை என்பது  எவராலும் மறந்துவிட முடியாத மிலேச்சத்தனமான செயல் என இந்திய மத்திய அரசாங்கம் அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை ஆட்சேபித்து மத்திய அரசாங்கம் சார்பில் வாதங்களை முன்வைத்த இந்திய சட்டமாஅதிபர் உயர்நீதிமன்றத்தில் நேற்று இதனை கூறியுள்ளார்.

இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டால் குறிப்பிட்ட குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார்களுக்கு நியாயம் கிடைக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு அண்மையில் தீர்மானித்திருந்தது.

இந்த தீர்மானத்தை ஆட்சேபித்து இந்திய மத்திய அரசாங்கம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்  நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.

ராஜிவ் காந்தி கொலை சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமை முற்றிலும் மாற்றமடைந்துள்ளதாக இந்த மனு நேற்று முன்தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தமிழக அரசின் சட்டத்தரணிகள் வாதங்களை முன்வைத்துள்ளனர்.

தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது அதன் அச்சுறுத்தலோ இல்லை எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இதனை கருத்திற்கொண்டே குற்றிவாளிகளான ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்ததாக தமிழக அரச சட்டத்தரணிகள் கூறியிருந்ததாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்