காணாமற்போனார் தொடர்பில் மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கானோர் சாட்சியம்

காணாமற்போனார் தொடர்பில் மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கானோர் சாட்சியம்

காணாமற்போனார் தொடர்பில் மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கானோர் சாட்சியம்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 7:34 pm

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இன்றைய இறுதிநாள் அமர்வில்  560 புதிய முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மேலும் இன்றைய நாளுக்கான சாட்சி விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்திருந்த 52 பேரில் 45 பேர் சாட்சி பதிவுகளை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரை உள்ளடக்கியதாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 23 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்கள் இன்று பதிவு செய்யப்பட்டன.

இதேவேளை, காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த இரண்டு நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளில் சாட்சியங்களை பதிவு செய்தது.

இதன் பிரகாரம் இதுவரை கடந்த இரண்டு நாட்களில் மொத்தமாக 112 பேரின் சாட்சியங்கள் ஆணைக்குழுவினால் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், புதிதாக 824 முறைபாடுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் சாட்சி விசாரணைகளுக்கான அமர்வுகள் நடத்தப்படவுள்ளன.

1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ், இந்த ஆணைக்குழு இயங்கி வருகின்றது.

ஆணைக்குழுவின் முதலாவது பகிரங்க அமர்வு வட மாகாணத்தில் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் இடம்பெற்றதுடன், இதன்போது பெரும் எண்ணிக்கையானோரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 16,000 பேர் ஆணைக்குழுவில் முறைபாடுகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்