தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2014 | 7:01 pm

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் இந்த மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் கயஸ் பெல்டானோ உத்தரவு பிறப்பித்தார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில்,  நேற்றுமுன்தினம் இரவு தலைமன்னார் கடற்பரப்பில் 21 பேரும், நெடுந்தீவு கடற்பரப்பில் 53 பேருமாக 74 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் தமிழக மீனவர்களின் 18 மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்கள் 53 பேரும், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்செய்யப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலைமையின் கீழ், தமிழக மீனவர்கள் 74 பேரும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படும் பட்சத்தில், இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு சாதகமான காரணிகளை தோற்றுவிக்கும் என இந்திய – இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என். தேவதாசன் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை, எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

எவ்வாறாயினும் இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதை இந்திய பிரதிநிதிகள் உறுதிசெய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயினும், இந்தியாவில் நடைபெற்ற மீனவர் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதியாக இடம்பெற்ற கைது நடவடிக்கை வரை, 10 தடவைகள் இலங்கை கடல் எல்லையை தமிழக மீனவர்கள் மீறியுள்ளதாக நிமல் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

இலங்கை கடற் பரப்பிற்குள் நுழைகின்ற தமிழக மீனவர்கள் இந்த நாட்டின் சட்டத்திற்கமைய கைது செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்