இலங்கை மீதான அதிருப்தியை நவநீதம்பிள்ளைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் ரொபர்ட் மெனென்டஸ்

இலங்கை மீதான அதிருப்தியை நவநீதம்பிள்ளைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் ரொபர்ட் மெனென்டஸ்

இலங்கை மீதான அதிருப்தியை நவநீதம்பிள்ளைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் ரொபர்ட் மெனென்டஸ்

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 8:42 pm

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுகளுக்கான குழுவின் தலைவர் ரொபர்ட் மெனென்டஸ், நவநீதம்பிள்ளைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுகளுக்கான குழுவின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனநாயக செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் குறித்து தமது குழு அதிருப்தியடைந்துள்ளதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வலுவான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வரை அதன் பொறுப்புக்கூறல், அரசியல் நல்லிணக்கம், மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ரொபர்ட் மெனென்டஸ் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பிரயத்தனங்கள், சர்வதேச சமூகத்தினருக்கு பதிலளிக்கும் வகையில் உரிய காலவரையறைக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க செனட் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது, மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு காரணியாக அமைந்துள்ளதுடன், பிரதேச மட்டத்தில் உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்கும் வழிகோலியுள்ளதாக செனட் சபையின் வெளியுறவுகளுக்கான குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் மறுசீரமைப்புக்கும், கலந்துரையாடலுக்கும் சட்ட ரீதியில் வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், துரதிர்ஷ்டவசமாக இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், வட மாகாண சபையின் தலைமைத்துவத்துடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலையும், அரசியல் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாகஅந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உண்மையான அரசியல் நல்லிணக்கத்திற்கு, அபிவிருத்தித் திட்டங்கள் மாற்றீடாக அமையாது என்றும் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மெனென்டஸ் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கையில் ஜனநாயக ரீதியான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுகளுக்கான குழுவின் தலைவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்