விசாரணைகளை முன்னெடுப்பது மனித உரிமைகள் ஆணையாளரின் கடமையல்ல – ஜீ.எல்.பீரிஸ்

விசாரணைகளை முன்னெடுப்பது மனித உரிமைகள் ஆணையாளரின் கடமையல்ல – ஜீ.எல்.பீரிஸ்

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2014 | 8:56 pm

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானமானது வேறு ஒரு  அரசாங்கம் ஒன்றின் தன்மையைக் கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுயாதீன அரசாங்கம் ஒன்றுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுக்கமுடியாது என நேற்று கொழும்பில் இடம்பெற்ற புத்தி ஜீவிகளுடனான சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், “குறித்த தீர்மானத்தின் ஆரம்பநிலை தொடக்கம் இறுதி வரையில் வாசிக்கும் போது மாற்று அரசாங்கம் ஒன்றின் மாதிரித் தன்மையினையே அது வெளிப்படுத்துகின்றது. அதாவது, நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டு தீர்மானங்களை மேற்கொண்டு உள்ளக நிர்வாக பொறிமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கவே அவர்கள் முற்படுகின்றனர். அதற்கு அனுமதியளிக்க முடியாது. இந்த நாட்டின் எதிர்காலம் மக்களினால் அமையப்பெற்ற  அரசாங்கம் வசமே காணப்படுகின்றது,” என்றார்.

இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை பொறிமுறையின் தலைமைத்துவத்தில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இருக்க வேண்டும்  என்ற தீர்மானம் தொடர்பான பிரேரணையில் காணப்படும் சரத்துக்கள் தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

“வெளிப்படையான ஒருவருக்கே விசாரணைகளை முன்னெடுக்க பொறுப்பளிக்க முடியும். ஆனால், இவர் எதனைச் செய்துள்ளார்? யுத்தம் முடிவடைந்து ஒரு வாரத்தின் பின்னர் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வெளிப்படையாகவே தெரிவித்தார். இவருக்குத்தான் இந்த விசாரணைப் பொறுப்பினை வழங்கியுள்ளனர். இவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது எவ்விதத்திலும் மனித உரிமைகள் ஆணையாளரின் கடமையல்ல. அதனைச் செய்வதற்கு சட்டரீதியான உரிமையும் அவருக்குக் கிடையாது,” என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்