அருட்தந்தை பிரவீன் மகேஷன், ருக்கி பெர்னாண்டோ கைது; ஐ.நா வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

அருட்தந்தை பிரவீன் மகேஷன், ருக்கி பெர்னாண்டோ கைது; ஐ.நா வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2014 | 6:45 pm

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான அருட்தந்தை பிரவீன் மகேஷன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் கடந்த 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிறிஸ்த்தவ ஒத்துழைப்புக்கான இயக்கம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர், சுனில் ஜயசேகர தெரிவித்ததாவது ;

” நாட்டில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மிகவும் மோசமான நடவடிக்கையாகவே நாம் இதனைக் காண்கின்றோம். சட்டத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி, அவர்களைக் கைது செய்து, துன்புறுத்துகின்ற நிலைக்கு இந்த அரசாங்கம் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. மதங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு மதச் சீருடை அணிந்த சிலர், சில இடங்களில் செய்த நடவடிக்கைகள் எமக்குத் தெரியும். இவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு இதுவரையும் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.”

மாற்றுக் கொள்கைகளுக்கான  நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டதாவது;

“இலங்கையில் ஆரம்பம் முதல் இதுவரை இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருகின்ற பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் உணர்ந்துகொண்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கைது செய்யப்படும் நடவடிக்கை குறித்து அறிந்து வைத்துள்ளதா?

இதேவேளை, அருட்தந்தை பிரவீன் மகேஷ் மற்றுத் ரெக்கி பெர்னாண்டோ ஆகியோர் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் ஸ்டெபான் டுஜாரிக் இதன் போது தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

“அவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. நாம் அவர்களை அறிந்துள்ளோம். சர்வதேச மனித உரிமை கொள்கைகளுக்கு அமைய மனித உரிமைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமும் இலங்கை ஜனாதிபதியும் 2009 ஆம் ஆண்டு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் மனித உரிமைப் பாதுகாப்பின் பொறுப்பு மற்றும் அது சார்ந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து நாடுகள் தொடர்பிலும் செயற்படக்கூடிய அதிகாரிகள் எமது அலுவலகத்தில் உள்ளனர். அந்த நிலைமை தொடர்பில் நாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றோம்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்