இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக சர்வதேச பொறிமுறைக்கான காலம் உதயமாகியுள்ளது- பிரித்தானியா

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக சர்வதேச பொறிமுறைக்கான காலம் உதயமாகியுள்ளது- பிரித்தானியா

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக சர்வதேச பொறிமுறைக்கான காலம் உதயமாகியுள்ளது- பிரித்தானியா

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 7:35 pm

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக சர்வதேச பொறிமுறையொன்றிக்கான காலம் உதயமாகியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள எழுத்து மூல அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தினை  குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் சர்வதேச விசாரணையொன்றை இலக்காக கொண்டு பிரித்தானியா செயற்படும் என பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ள நிலையிலும், இலங்கை தொடர்ந்தும் நம்பகத்தன்மை வாய்ந்த உள்ளக பொறிமுறையை ஸ்தாபிக்கவில்லை என வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், இலங்கையின்  மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் சர்வதேச பொறிமுறையொன்றை முன்னெடுக்கும் காலக்கட்டம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் முழுமையான அனுமானங்களுக்கு அமைவாக இடம்பெறாமையால்,  சர்வதேச விசாரணைக்கான வலுவான தீர்மானத்திற்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் டேவிட் கெமரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றல், மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளை புனரமைத்தல் மற்றும் சிறுவர் போராளிகளை சமூகமயப்படுத்தல் போன்ற விடயங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் பிரித்தானியா இதற்கு முன்னர் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்த போதிலும், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் திருப்திகரமான முன்னேற்றங்கள் அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லிணக்க செயற்பாடுகளில் பொறுப்புக்கூறல்  முக்கியமானது என்பதால், அதனை புறம்தள்ளிவிட முடியாதென வில்லியம் ஹேக் தனது எழுத்து மூலமான அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து  இனங்களினதும் நியாயமான எதிர்பார்ப்புகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது இலங்கை தொடர்பான தீர்மானத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்