வடக்கின் பெருஞ்சமர்; ஸ்திரமான நிலையில் யாழ். மத்திய கல்லூரி

வடக்கின் பெருஞ்சமர்; ஸ்திரமான நிலையில் யாழ். மத்திய கல்லூரி

வடக்கின் பெருஞ்சமர்; ஸ்திரமான நிலையில் யாழ். மத்திய கல்லூரி

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2014 | 6:08 pm

இலங்கையில் தொன்மை வாய்ந்த பாடசாலை மட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ‘வடக்கின் பெருஞ்சமர்’ யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

யாழ். மத்திய கல்லூரிக்கும் புனித பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 3 நாட்களைக் கொண்ட இந்தப் போட்டி 108ஆவது தடவையாக நடைபெறுகின்றது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தில் பதினாதன் நிரோஜன் அதிகபட்சமாக 40 ஓட்டங்களையும், குலேந்திரன் ஜுனிஸ் கனிஷ்டன் 63 ஓட்டங்களையும், கலியுகவரதன் சன்சயன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில், புனித பரியோவான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திரன் லோஹதீஷ்வர் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது முதலாவது இனிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித பரியோவான் கல்லூரி, ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.

இன்றைய ஆட்டநேர முடிவில் பரியோவான் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் பரியோவான் சார்பில் மணிவண்ணன் சிந்துர்ஜன் 18 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மத்திய கல்லூரியின் பவனாதன் நிரூபன் மற்றும் சிவராசா மதுஷன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

கடந்த இரண்டு வருடங்களாக இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இம்முறை, முதல் நாளிலேயே சிறப்பாக பிரகாசிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக
உள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்