மாயமான மலேஷிய விமானம்; தேடுதலில் 40 கப்பல்கள், 36 விமானங்கள், 2000 மீனவர்கள்

மாயமான மலேஷிய விமானம்; தேடுதலில் 40 கப்பல்கள், 36 விமானங்கள், 2000 மீனவர்கள்

மாயமான மலேஷிய விமானம்; தேடுதலில் 40 கப்பல்கள், 36 விமானங்கள், 2000 மீனவர்கள்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 9:27 am

தென் சீனக் கடலில் மாயமாக மறைந்த மலேஷியன் எயார்லைன்ஸ் விமானம் என்னவானது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

குறித்த விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதா, கடலில் மூழ்கியதா, தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தனரா அல்லது கடத்திச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சனிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்த விமானம் 1.30 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்தது.

இதைத் தொடர்ந்து மலேஷியா முதல் வியட்நாம் வரையிலான கடல் பகுதியில் தீவிர தேடுதல் ஆரம்பமானது.

40ற்கும் மேற்பட்ட கப்பல்கள், 36ற்கும் மேற்பட்ட விமானங்கள் தென் சீனக் கடல் பகுதியில் தேடுதல் நடிவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

மலேஷியா மட்டுமன்றி சீனா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 10 நாடுகளின் போர்க்கப்பல்கள், அதிநவீன போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடற்படை, விமானப் படை இணைந்து தேடியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியாததால் உள்ளூர் மீனவர்கள் தற்போது தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர்.

மலேஷியா மற்றும் தாய்லாந்தை சேர்ந்த 2000ற்கும் மேற்பட்ட மீனவர்கள் 1000ற்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குள் சென்றுள்ளனர்.

வியட்நாம் எல்லைப் பகுதியில் இதுவரை எதுவும் கிடைக்காததால் தாய்லாந்தை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் தாய்லாந்து கடற்படை தேடுதல் பணியைத் ஆரம்பித்துள்ளது.

காணாமல் போன மலேஷிய விமானத்தில் 152 சீனர்கள் பயணம் செய்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் பெய்ஜிங்கில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 5 இந்தியர்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த இந்தியர் ஆகியோரும் பயணம் செய்துள்ளனர்.

வியட்நாம் எல்லையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் படலங்கள் மிதப்பதை அந்த நாட்டு இராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அந்தப் படலம் சேகரிக்கப்பட்டு கோலாலம்பூர் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. இதில், கடலில் பரவியிருந்த பெட்ரோல் படலம் மலேஷியன் எயார்லைன்ஸ் விமானத்தின் எரிபொருள் அல்ல என்பது தெரியவந்தது.

இதேவேளை, மலேஷிய விமானத்தில் 4 பேர் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அவர்களில் 2 பேர் மட்டுமே சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று மலேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்